தஞ்சை: 13 வருடம் ஒன்றாக பழகினோம்...ஆசிரியையை கொலை செய்தது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

காவ்யாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என கனவு கண்ட எனக்கு அவரது தகவல் பேரிடியாக இருந்தது.;

Update:2025-11-28 19:24 IST

தஞ்சை,

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகள் காவியா(வயது 26), எம்.ஏ., பி.எட். வரை படித்துள்ளார்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி வந்த காவியா தற்போது தனது ஊரின் அருகே உள்ள ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தினமும் இவர் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம்.அதே ஊரை சேர்ந்தவர் கருணாநிதி என்பவரின் மகன் அஜித்குமார் (29). பெயிண்டரான அஜித்குமாரும், காவியாவும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். காவ்யா, அஜித்குமாரை காதலித்து வந்தது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் காவ்யாவை அவரது பெற்றோர், தங்களது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி உறவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 23-ந்தேதி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.இந்த விவரத்தை காவியா தனது காதலன் அஜித்குமாருக்கு தெரிவிக்காமல் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு காவியாவும், அவரது காதலன் அஜித்குமாரும் செல்போனில் வீடியோ காலில் பேசியுள்ளனர்.அப்போது அஜித்குமாரிடம், நமது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் எனக்கு எனது உறவினருடன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என காவியா தெரிவித்துள்ளார். அத்துடன் நிச்சயதார்த்த போட்டோக்களையும் அஜித்குமாருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார்.

அதைக்கேட்டதும் அஜித்குமார் அதிர்ச்சியில் உறைந்தார். தான் உயிருக்கு உயிராக காதலித்தவருக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தான் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவர் இருப்பதை எண்ணி, எண்ணி அவர் கடும் ஆத்திரம் அடைந்தார். நேற்று முன்தினம் இரவு முழுவதும் அவருக்கு தூக்கமே வரவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை காவியா வழக்கம்போல் பள்ளிக்கு தனது ஸ்கூட்டரில் சென்றார். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது காவியாவின் ஸ்கூட்டரை அஜித்குமார் வழிமறித்துள்ளார். பின்னர் உனக்கு உனது உறவினருடன் நிச்சயதார்த்தம் ஆனதை ஏன் என்னிடம் கூறவில்லை எனக்கேட்டு காவியாவிடம், அஜித்குமார் தகராறு செய்துள்ளார்.

என்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன் உனக்கு திருமணம் நடக்கப்போகிறதா?. நான் இல்லாமல் வேறு ஒருவருடன் நீ வாழ்ந்து விடுவாயா? எனக்கேட்டு காவியாவிடம், அஜித்குமார் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அஜித்குமார், எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது எனக்கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலையில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த காவியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார்.

பின்னர் அஜித்குமார் நேராக அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்துள்ளார்.இதையடுத்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கொலை நடந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

காவ்யாவை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி வாலிபர் அஜித்குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நானும் காவ்யாவும் 13 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். ஆனால் காவ்யா என்னை மறந்துவிட்டு அவரது அத்தை மகனை திருமணம் செய்யபோவதாக நேற்று முன் தினம் இரவு என்னிடம் போனில் தெரிவித்தார். நிச்சயதார்த்த புகைப்படங்களை வீடியோ காலிலும் அவர் என்னிடம் காட்டினார். நிச்சயதார்த்த புகைப்படங்களையும் எனது வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்தார். எனது பெற்றோருக்கு நமது காதல் விவகாரம் பிடிக்கவில்லை.அதனால் என்னுடைய அத்தை மகனுக்கு நிச்சய தார்த்தம் செய்துள்ளனர். அவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளபோகிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. இருவரும் பிரிந்துவிடலாம் என்றார்.

இது எனக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது நம்மோடு இத்தனை ஆண்டுகளாக பழகி விட்டு இப்போது காவ்யா வேண்டாம் என்று கூறியது எனக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனது காதலுக்கு இதுபோன்ற நிலை ஏற்படும் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. காவ்யாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என கனவு கண்ட எனக்கு அவரது தகவல் பேரிடியாக இருந்தது. இதனால் நேற்று முன் தினம் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தேன். அப்போது எனக்கு கிடைக்காத காவியா வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்கிற எண்ணம் எனது மனதில் ஏற்பட்டது. மறுநாள் காலையில் காவியாவை வெட்டிக்கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி நேற்று காலையில் எனது ஸ்கூட்டரில் பள்ளி கூடத்துக்கு சென்று கொண்டிருந்த காவ்யாவை வழி மறித்து தகராறு செய்தேன். என்னை மறந்து விட்டு உன்னால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு எப்படி உனக்கு மனம் வந்தது என்று கேட்டேன். அதற்கு காவ்யா சரியாக பதில் அளிக்காததால் எனக்கு ஆத்திரம் தலைக்கே ஏறியது.

மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனதை கல்லாக்கிக்கொண்டு காவ்யாவை சரமாறியாக வெட்டிக்கொன்றேன். இவ்வாறு அஜித்குமார் வாக்குமூலம் அளித்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜித்குமாருக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்