கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிப்பா? - வெளியான தகவல்
கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.;
சென்னை,
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்:
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட உள்ளது. 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரெயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கியது.
தமிழ்நாடு அரசு ஒப்புதல்:
இதையடுத்து, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் திட்டத்துக்கு பல மாதங்களாக ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு நாட்கள் கடத்தி வந்தது.
மத்திய அரசு நிராகரிப்பு?
இதற்கிடையே, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி, திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளக்கம்:
ஆனால் இதனை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கூறுகையில், “கோவை, மதுரை புதிய மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை. திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அளித்துள்ளது. கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் திட்ட அறிக்கையை அனுப்புமாறு தமிழக அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கேட்டுள்ளபடி, கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்படும்.” என்று தெரிவித்துள்ளது.