உல்லாசமாக இருந்ததை பார்த்த மூதாட்டி... கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் செய்த கொடூர செயல்
பணி தொடர்பாக ஜாய் மெட்டில்டா, நாகேஷ் வீடியோ கால் மூலம் பேசி வந்தனர்.;
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியை சேர்ந்தவர் லோகேந்திரன்(வயது 33). பைனான்சியரான இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா(27). அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்த நிறுவனத்தின் கிளைகள், கர்நாடகாவிலும் உள்ளன. அதில் ஒரு கிளை அலுவலகத்தில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிண்டிபல் பகுதியை சேர்ந்த நாகேஷ்(25) மேலாளராக பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனம் என்பதால் கடன் பெறுபவர்களின் வீடுகளை ஆய்வு செய்யும் பணி தொடர்பாக ஜாய் மெட்டில்டா, நாகேஷ் வீடியோ கால் மூலம் பேசி வந்தனர்.
அப்போது 2 பேருக்கும் பழக்கமாகி நாளடைவில் கள்ளக்காதலானது. நாகேஷ் கர்நாடகாவில் இருந்து தனது நண்பரின் காரை எடுத்துக்கொண்டு அடிக்கடி அன்னூர் வந்து ஜாய் மெட்டில்டாவை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்கும் விடுதியில் உல்லாசமாக தங்கி இருந்த அவர்கள் 2 பேரையும், ஜாய் மெட்டில்டாவின் கணவர் லோகேந்திரன் கையும், களவுமாக பிடித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் நிதி நிறுவனத்தினரிடமும் கூறியதால், 2 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி லோகேந்திரன் மதுரைக்கு சென்றார். அப்போது ஜாய் மெட்டில்டா நாகேஷை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்தார். இதை வீட்டில் இருந்த லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் பார்த்து கண்டித்தார். இதனால் அவரை தலையணையால் முகத்தில் அமுக்கி மூச்சு திணறடித்து கொன்றனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறி ஜாய்மெட்டில்டா நாடகமாடி தப்பித்தார்.
இதைதொடர்ந்து கணவர் லோகேந்திரனை கொலை செய்யவும் திட்டமிட்டு கடந்த 22-ந்தேதி நாகேஷை வரவழைத்தார். 23-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு வீட்டில் லோகேந்திரன் தூங்கி கொண்டு இருந்தபோது ஜாய் மெட்டில்டா கதவை திறந்து நாகேஷை உள்ளே வரவைத்தார். இருவரும் சேர்ந்து லோகேந்திரனை கொலை செய்ய முயன்றனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக லோகேந்திரன் தப்பிக்க நாகேஷ் பின்பக்க கதவு வழியாக தப்பி கர்நாடகா சென்றுவிட்டார். இதுகுறித்து லோகேந்திரன், அன்னூர் போலீசில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் மீண்டும் ஜாய்மெட்டில்டாவை பார்க்க கர்நாடகாவில் இருந்து கஞ்சப்பள்ளி பிரிவு பகுதிக்கு காரில் நாகேஷ் வந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் ஜாய்மெட்டில்டாவுடன் சேர்ந்து மயிலாத்தாளை கொலை செய்ததுடன் லோகேந்திரனையும் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜாய்மெட்டில்டா, நாகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.