திருநெல்வேலியில் சப் கலெக்டராக நடித்து 10 சவரன் நகை மோசடி: பெண் கைது
திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னை சப் கலெக்டர் என அறிமுகப்படுத்தி மற்றொரு பெண்ணிடம் 10 சவரன் நகையை பெற்றுக் கொண்டு மோசடி செய்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், காரியாகுளம் பகுதியைச் சேர்ந்த மகிழ்வதனா என்பவரிடம், நக்கனேரி பகுதியைச் சேர்ந்த சத்தியாதேவி (வயது 34) என்ற பெண், தன்னை சப் கலெக்டராக அறிமுகப்படுத்தி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டி 100 சவரன் நகை அவசியம் என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் ஏற்கெனவே 90 சவரன் இருப்பதாகவும், மீதமுள்ள 10 சவரன் நகையை தந்தால், ஒப்பந்தம் கிடைத்த பிறகு அதிக லாபம் தருவதாக கூறி, மகிழ்வதனாவின் கணவரிடமிருந்து 10 சவரன் நகையை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு மகிழ்வதனா திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம் புகார் அளித்தார். அதன் பேரில் புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அதில் மகிழ்வதனா, அந்த பெண்ணிடம் நகை கொடுத்து ஏமாற்றப்பட்ட விபரம் உண்மை என தெரியவந்தது.
இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணை தீவிரமாக தேடி வந்த நிலையில் சத்தியாதேவியை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர், ஏட்டு முத்துராமலிங்கம் மற்றும் பெண் காவலர் பெருமாள் ஆகியோர் சேர்ந்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் நகை மோசடி செய்து ஏமாற்றி வந்த நபரை, சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.