ஆசைக்கு இணங்க மறுத்த பெண் ஆற்றில் மூழ்கடித்து கொலை - 2 பேர் கைது
பாண்டவையாறு கரையில் பெண் ஆடு மேய்க்க சென்றார்.;
திருவாரூர்,
திருவாரூரை அடுத்த கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாளகரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா(வயது 40). இவர்களுக்கு 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன், 2-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளனர். சுதா வீட்டின் அருகே உள்ள பாண்டவையாறு கரையில் ஆடு மேய்க்க சென்றார்.
அப்போது அந்த வழியாக திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த முருகன் (48), அஜித்குமார்(38) ஆகிய இருவரும் வந்தனர். அவர்கள் சுதாவை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.இவர்களது ஆசைக்கு சுதா இணங்க மறுத்த நிலையில் அருகில் இருந்த பாண்டவையாற்றில் தள்ளி சுதாவை நீரில் மூழ்கடித்து விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
ஆற்றுக்கரையில் இருந்து அவர்கள் இருவரும் பதற்றமாக ஓடிவருவதை கண்ட அந்த பகுதி மக்கள் அவர்கள் ஓடி வந்த திசையில் சென்று பார்த்துள்ளனர். அப்போது சுதா அங்கு அலங்கோலமாக கிடந்துள்ளார். உடனடியாக சுதாவை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொரடாச்சேரி போலீசார் தப்பி ஓடிய முருகன் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.