உலக சுற்றுச்சூழல் தினம்: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி
பசுமையைப் பரப்புவோம், புவியைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.;
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் ரேவதி பாலன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பசுமையைப் பரப்புவோம், புவியைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் "நெகிழியை ஒழிப்போம், நம் பூமியைக் காப்போம்" என்ற பதாகைகளை ஏந்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்போம் என்று கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்த வாழை இலை, பாக்கு மர இலை, மரப் பொருட்கள், காகிதப் பைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. அதோடு இந்த தகவலை குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எடுத்துக் கூறுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.