குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்
6 பேர் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கோப்புப்படம்
வேலூர்,
சின்னகாஞ்சீபுரத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், தனது நிலத்தை விற்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசின் என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்தார். மேலும் அந்த நிறுவனத்தில் தனக்கு தெரிந்தவர்களையும் சேர்த்து ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சீட்டு கட்டி உள்ளார்.
தொடர்ந்து அந்த நிறுவனத்தினர் இளம்பெண் சேர்த்து விட்ட நபர்களுக்கு ரூ.40 லட்சத்தை கொடுத்துள்ளனர். மீதி பணத்தை அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இளம்பெண் அந்த பணத்தை அல்தாப் தாசினிடம் அடிக்கடி கேட்டு வந்தார். அதற்கு அவர் வேலூர் வந்து பணத்தை பெற்றுக்கொள் என்று கூறி உள்ளார்.
பின்னர் வேலூர் வந்த பெண்ணிடம், பொது இடத்தில் அதிக தொகை கொடுத்தால் பிரச்சினை வரும். என்பதால் விடுதிக்கு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும், அவரது தாயாரும் விடுதிக்கு சென்றனர். அங்கிருந்த 5 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து பணத்தை கொடுக்க முடியாது என்றும், பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
மேலும் இளம் பெண்ணின் தாயை ஒருவர் வேறு ஒரு இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நேரத்தில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம், உன்னை பாலியல் பலாத்காரம் செய்தும், ஆடைகளை கழற்றி நிர்வாணமாகவும் வீடியோ எடுத்து வைத்துள்ளோம். இதை வெளியில் சொன்னால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பெண் கடந்த மாதம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.