தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு: வாலிபர் கைது
தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரின் கழுத்தில் அணிந்திருந்த 13 கிராம் தங்க செயினை, பைக்கில் வந்த ஒரு வாலிபர் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.;
தூத்துக்குடி டிஎன்பிஹெச் காலனியில் வசித்துவரும் சற்குணம் அருள்ராஜ் மகன் மாரிசெல்வரத்தினம் (வயது 29), பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 11ம் தேதி இரவு தனது வீடு அருகில் ஜோதிநகர் விலக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபர் இவரிடம் செல்போனில் ஒரு கால் பண்ண வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து செல்வரத்தினம் நம்பர் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் மாரிசெல்வத்தினம் கழுத்தில் அணிந்திருந்த 13 கிராம் தங்க செயினை பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் சென்று விட்டாராம். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் அவர் புார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்குப்பதிவு செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சைரஸ் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி வடக்குசோட்டையன் தோப்பு, விவேகானந்தர் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் மாடசாமி(23) என்பவர் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.