ஐகோர்ட்டில் குற்றவாளி கூண்டில் நின்றதை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது
வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பரத்தை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது குற்றவாளி கூண்டில் நிற்பதையும், பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வருவதையும் வீடியோவாக எடுத்து, அதனை பரத் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை ஏராளமானோர் லைக் செய்த நிலையில், சமூக வலைதளங்களில் பரத்தின் வீடியோ வைரலாக பரவியது.
இந்த வீடியோ விவகாரம் காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், வீடியோவில் இருக்கும் பரத் மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் வழிப்பறி தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த 16-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் ஆஜரானபோது, அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்தும் சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த வீடியோவை எடுத்த உதவிய 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞர் பரத்தை சிறையில் அடைத்ததோடு, 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.