பா.ஜனதாவின் வயதுடைய இளம் தலைவர்

நிதின் நபின் கட்சி தலைவராக பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.;

Update:2026-01-21 01:42 IST

இன்று வேகமாக வேரூன்றி மத்திய அரசாங்கத்தில் தொடர்ந்து 3 முறையும், பல மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாகவும், கூட்டணி அரசாங்கமாகவும் கோலோச்சிக்கொண்டு இருக்கும் பா.ஜனதாவுக்கு இப்போது 45 வயதாகிறது. 1951-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி சியாமா பிரசாத் முகர்ஜியால் ஒரு அரசியல் கட்சியாக “பாரதிய ஜன சங்கம்’’ என்ற பெயரில் தொடங்கப்பட்டாலும், 1980-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந்தேதிதான் அது “பாரதீய ஜனதா கட்சி’’ ஆக உருவெடுத்தது. அந்தநேரத்தில் ராமர் ரதயாத்திரையை நடத்தியதாலும், ராமர் பிறந்த இடவிவகாரத்தை கையில் எடுத்ததாலும் பா.ஜனதா வீறுகொண்டு வளர்ந்தது.

1996-ல் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெரியகட்சியாக முத்திரைப்பதித்து வாஜ்பாய் தலைமையில் ஆட்சியமைத்து, அதுவும் 13 நாட்களே நீடித்தது. மீண்டும் 1998-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து வெற்றிப்பெற்று வாஜ்பாய் தலைமையில் 2004 வரை ஆட்சி நடத்தியது. பிறகு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் 2014-ல் ஆட்சி அமைந்து, இப்போது 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் இருக்கிறது. பா.ஜனதா ஆட்சி அமைவதற்கு அடித்தளம் அமைத்தது இந்த கட்சியின் வலுவான கட்டமைப்பு, தொடர்ந்து நியமிக்கப்பட்ட கட்சி தலைவர்கள்தான் முக்கியகாரணம். முதலில் வாஜ்பாய், அதன்பிறகு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என்று தொடங்கி இதுவரை 14 தலைவர்கள் இருந்தாலும், அதில் அத்வானி 3 முறையும், ராஜ்நாத்சிங் 2 முறையும் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அந்த கணக்குப்படி, இதற்கு முன்பு தலைவராக இருந்த ஜே.பி.நட்டா, 11-வது தலைவராக கடந்த 2020-ல் இருந்து பதவிவகித்தார். அவருடைய பதவிக்காலம் முடிந்தநிலையில் இப்போது புதிய தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் கடந்த டிசம்பர் 14-ந்தேதி முதல் செயல்தலைவராக இருந்த பீகாரைச் சேர்ந்த நிதின் நபின், பிரதமர் நரேந்திரமோடியாலும் மற்றும் அனைத்து தலைவர்களாலும் முன்மொழிந்த மனுக்களால் போட்டியின்றி பா.ஜனதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பா.ஜனதாவின் வயது 45, இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதின் நபினின் வயதும் 45 என்ற புதிய வரலாற்றையும் அவர் படைத்திருக்கிறார். இதுவரை தேசியதலைவர்களாக இருந்தவர்களிலேயே நிதின்நபின்தான் வயதில் குறைந்தவர். ஆக ஒரு தலைமுறை மாற்றம் நடந்திருக்கிறது. வயதில் குறைந்தவர் என்றாலும், அரசியலில் நீண்ட அனுபவமிக்கவர். 26 வயதில் எம்.எல்.ஏ. ஆகி 5 முறை எம்.எல்.ஏ. ஆகவும், மந்திரியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட நிதின் நபின் கட்சி தலைவராக பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

கட்சியின் கட்டமைப்பு ‘ஜென் எக்ஸ்’ (1965-1980-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள்) ஆக இருக்கும் நேரத்தில், வாக்காளர்களில் ‘ஜென் இசட்’ அதாவது, 1997 முதல் 2012 வரை பிறந்தவர்களை குறிவைத்து தங்கள் ஓட்டுவங்கிக்கு அவர்களை கொண்டுவரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதுதவிர, அனைத்து செயலாளர்கள், அணி தலைவர்கள், மாநில தலைவர்கள் போன்ற முக்கிய பொறுப்புகளில் அனுபவமும், இளமையும் கலந்த கலவையோடு நியமனம் மேற்கொள்ளவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. இது எல்லாவற்றையும்விட அடுத்த சிலமாதங்களில் தமிழ்நாடு, மேற்குவங்காளம், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல்களில் கணிசமான வெற்றியை தேடித்தரவேண்டிய சவால் அவருக்கு இருக்கிறது. ஆக பதவியேற்றவுடனேயே பெரும் சவால்களை எதிர்நோக்கி இருக்கும் நிதின்நபின், அதை எப்படி சமாளிக்கப்போகிறார்? என்பதற்கு காலம்தான் பதில்சொல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்