இனி அதிகாரிகள் கையில்தான்

இன்னும் 6 வாரங்களில் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிடும்.;

Update:2026-01-13 04:49 IST

தமிழ்நாடு இன்னும் 3 மாதங்களுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. அடுத்த மாதம் 20-ந்தேதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் வெளியிட வாய்ப்பு உள்ளது. அப்படி பார்த்தால் இன்னும் 6 வாரங்களில் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிடும். தேர்தல் என்றாலே பிரசார கூட்டங்கள், ரோடு ஷோ என்ற சாலை பேரணி, ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. கண்டன கூட்டங்கள் என்ற போர்வையிலும் சில நேரங்களில் அரசியல் கட்சியினர் தங்கள் பிரசாரங்களை முன்னெடுப்பார்கள். முன்பெல்லாம் தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் பெரிய மைதானத்தில் மேடை அமைத்து கூட்டங்களை நடத்தி வந்தார்கள். ஆனால் இப்போது காலமும் மாறிவிட்டது, காட்சியும் மாறிவிட்டது.

அலங்கரிக்கப்பட்ட சொகுசு பஸ்களையே அரசியல் கட்சி தலைவர்கள் பிரசார வாகனங்களாக மட்டுமல்லாமல் பிரசார மேடையாகவும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதற்கு தொடக்கப்புள்ளி வைத்தது அ.தி.மு.க.தான். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பச்சை நிறத்தில் ஒரு பஸ்சை தயார் செய்து, அதன் மேல் நின்று அனல் பறக்க பிரசாரம் செய்கிறார். தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ஒரு படி மேலே போய் பஸ்சின் மேல்புறத்தில் நடந்துகொண்டே பேசும் வகையில் அவரது பிரசார வாகனம் தயார்செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளும் இதுபோல சகல வசதிகளையும் கொண்ட பிரசார பஸ்களை தேர்தலுக்காக தயார் செய்யத்தொடங்கிவிட்டார்கள். இதனால் தேர்தல் பிரசார கூட்டங்களில் மேடை அமைக்கவேண்டிய அவசியம் அரசியல் கட்சிகளுக்கு இருக்காது.

மக்களை ஒரு இடத்தில் கூட வைத்துவிட்டு, அந்த கூட்டத்தின் நடுவிலேயே பிரசார பஸ்சின் மீது ஏறி நின்று அரசியல் கட்சியினர் பேசி வருகிறார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் நடிகர் விஜய் பேசிய கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மரணம் அடைந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதுதொடர்பான விசாரணைக்காக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் நடிகர் விஜய் நேற்று ஆஜரானார். இதற்கிடையில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோக்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டுமல்லாமல் மத ரீதியான மற்றும் கலாசார ஊர்வலங்கள் போன்ற 5 ஆயிரத்துக்கு மேல் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.

5 ஆயிரத்துக்கு குறைவாக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்போது அமலில் இருப்பதுபோல சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறும் நடைமுறையே தொடரும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் இவ்வாறு பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளை நடத்தலாம்? என்பதை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்தையும் பெற்று முடிவுசெய்து அறிவிக்கவேண்டும் என்றும் அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல பிரசார கூட்டங்களுக்கான அனுமதியை எவ்வாறு பெறவேண்டும் என்பதற்கு பல கட்டுப்பாடுகள், விதிகள், நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறை வரவேற்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் இதையெல்லாம் நூற்றுக்கு நூறு கடைப்பிடித்து அனுமதி வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துவதும் அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது. அரசியல் கட்சிகளும், மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கினால் கரூர் சம்பவம் போல இனி ஒருபோதும் நடக்காது.

Tags:    

மேலும் செய்திகள்