தமிழர்களின் அடையாளம் பொங்கல்
இந்த ஆண்டு பொங்கல் செலவுக்காக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.3 ஆயிரமும், பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டது.;
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல்தான் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. அறுவடை பண்டிகையாக இது பார்க்கப்படும் சூழலில், நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் இது கொண்டாடப்படுகிறது. அதாவது, மகர சங்கராந்தி, லோஹ்ரி, மாக்பிகு, கனுமா, உத்தராயண், துசு பராப் என்பன போன்றவை அதில் அடங்கும். நாம் பொங்கலை என்ன காரணத்துக்காக கொண்டாடுகிறோமோ, அதே காரணத்துக்காகத்தான் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், சில வெளிநாடுகளிலும் கொண்டாடுகிறார்கள்.
என்னதான் பணியை எளிமைப்படுத்த நவீன கண்டுபிடிப்புகள் வந்தாலும், வானம் பார்த்த பூமி இயற்கையைத்தான் சார்ந்து இருக்கிறது. அதாவது விளைச்சலுக்கு ஆற்றலைத்தரும் சூரியன், மண்ணுக்கு தேவையான ஈரச்சத்துகளை வழங்கும் மழை, பயிர்களை தாங்கிப்பிடிக்கும் மண், இதோடு காற்றும் அளவுக்கு அதிகமாக அடிக்காமல் இருக்கவேண்டும். இப்படி இயற்கையோடு கரம் கோர்த்துதான் விவசாயி பயிர் சாகுபடி செய்கிறார். சூரியனின் கோரப்பார்வை, காற்று, மழை இதில் ஏதாவது ஒன்று அளவைத்தாண்டினாலும் கூட விளைச்சல் பொய்த்துவிடும். இதெல்லாம் சரியாக இருந்தால் அமோகமாக விளைச்சல் அடைந்து, தை மாதத்தில் விவசாயிகளின் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதனால்தான் பொதுவாக விவசாயிகள் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். மகத்துவமிக்க அந்த தை மகளை மனதார வரவேற்கும் விதமாகத்தான் விவசாயிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைத்திருநாள் அதாவது, பொங்கலை 4 நாட்கள் கொண்டாடுகிறார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கோட்பாடாக பொங்கலுக்கு முந்தைய நாளை போகிப்பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். தை முதல் நாளான இன்று இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் பண்டிகை சாதி, மதம், இன வேறுபாடு இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
இப்போதெல்லாம் கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட வண்ண கோலமிட்டு, முக்கரும்பு சாத்தி பொங்கல் பொங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். வீடுகளின் முற்றத்தில் காற்று உள்ளே புகாத அளவுக்கு புதிய செங்கற்களால் அடுப்பு வைத்து புதுப்பானையில் புதிதாக விளைந்த அரிசிமணிகளை போட்டு, அதில் வெல்லம், ஏலக்காய், முந்திரி பருப்பு சேர்த்து நெய் ஊற்றி பொங்கல் பொங்குகிற நேரத்தில் பாலையும் ஊற்றி ‘பொங்கலோ பொங்கல்’ என்று பூமி குலுங்கும் அளவுக்கு மாதர்கள் குலவையிட்டு பொங்கல் வைப்பார்கள். இந்த சுவையான உணவுதான் அன்றைய நாளில் காலை உணவு பட்டியலை அலங்கரிக்கும். இதனை உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து உண்பார்கள். 2-வது நாள் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டு பொங்கலாக கொண்டாடப்படுகிறது. 3-வது நாளான நாளை மறுநாள் பந்தத்துக்கு வலுசேர்க்கும் உறவுகள் ஒன்றுகூடும் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் செலவுக்காக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.3 ஆயிரமும், பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டது. இதேபோல பல தனியார் நிறுவனங்களும் பொங்கலிடுவதற்காக ரொக்க பணம் கொடுத்து ஊழியர்களை மகிழ்விக்கின்றன. இதனால் அனைவரின் வீடுகளிலும் ஆனந்தப்பொங்கலாக கொண்டாடப்படும் பொங்கலில் பொங்கல் மட்டுமின்றி மகிழ்ச்சியும் பொங்கும். பொங்கல் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, விவசாய தொழிலை சாராதவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள்தான். வேலை கொடுத்து படி அளக்கும் முதலாளிகளுக்கும், அரசுக்கும் என வாழ்க்கை சக்கரத்துக்கு அச்சாணியாக இருப்பவர்களுக்கும், தொழில் செய்ய துணையாக இருக்கும் கருவிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் இது. தமிழன் நன்றி மறவாதவன் என்ற வகையில் நன்றிக்கடன் செலுத்துவதையே தனது பிறவிப்பயனாக கருதி வேட்டி உள்ளிட்ட பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடும் மகிழ்ச்சிகரமான பண்டிகை இது. அனைவரும் கொண்டாடுங்கள், பொங்கலோ பொங்கல்.