16 முறை அழித்தாலும் அசையாமல் எழுந்து நிற்கும் சோம்நாத் கோவில்
சோம்நாத் கோவிலை சிவபெருமானே கட்டியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.;
சமீபத்தில் இந்தியாவின் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் “சோம்நாத் – சுயமரியாதை பெருவிழா: ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை” என்ற கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இந்தக் கட்டுரையை பிரதமர் மோடி, இந்திய நாட்டின் பிரதமர் என்ற முறையில் மட்டுமல்லாமல், சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவர் என்ற முறையிலும் எழுதியிருந்தார்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ்பட்டன் என்ற இடத்தில் இந்த சோம்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பற்றி பண்டைய இந்து மத நூல்களிலும், வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக கடவுள்களுக்கு, மன்னர்களும் - ஆன்மிகப் பெரியவர்களும்தான் கோவில்கள் கட்டியதாக வரலாறு உண்டு. ஆனால் சோம்நாத் கோவிலை சிவபெருமானே கட்டியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம், இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கங்கள் தலங்கள் பற்றி குறிப்பிடுகிறது. ஜோதிர்லிங்கம் என்பது இந்து மதத்தில் சைவக் கடவுளாகப் போற்றப்படும் சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களில் ஒன்றாகும். இது ஒளிமயமான லிங்கம் என்று அர்த்தம் தரும் வகையில் ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதில் மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், மராட்டிய மாநிலங்களில் தலா இரண்டு ஜோதிர்லிங்கங்கள் இருக்கும் கோவில்களும், தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு ஜோதிர்லிங்க கோவில்களும் உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவில்தான் ஜோதிர்லிங்க யாத்திரை செல்வோர் செல்ல வேண்டிய முதல் தலமாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஜோதிர்லிங்க கோவிலாக விளங்குவது ராமேசுவரத்தில் உள்ள ஸ்ரீராமநாத சுவாமி கோவிலாகும். ராவணனைக் கொன்ற பாவம் நீங்க, ராமன் மணலால் ஆன லிங்கத்தை இங்கு வைத்து வழிபட்டார் என்பதால் இந்த ஊருக்கு ராமேசுவரம் என்று பெயர் வந்தது என்பது வரலாறு. ஆக, 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த தனிப்பெருமையாகும்.
சோம்நாத்தில் உள்ள ஜோதிர்லிங்க ஆலயம் பல பேரரசுகளின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் கண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது கட்டுரையில், இந்த ஆண்டு சோம்நாத் கோவிலுக்கு மிக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது என்று கூறி, இந்த புண்ணியத் தலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, 1026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் கஜினி முகமது இந்தக் கோவிலை தாக்கி அழித்தார். அதன் பிறகு அது மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது. இது போல மொத்தம் 16 முறை மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கம்பீரமாக எழுந்து நிற்க வைக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் பக்தர்களே, அந்தக் கோவிலை மீண்டும் கட்டி புத்துயிர் அளித்தனர்.
அந்தவகையில், கடைசியாக அழிக்கப்பட்ட பிறகு 1951-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி, பக்தர்களால் கட்டியெழுப்பப்பட்ட அந்த கோவிலை அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார். பகவத் கீதையில் உள்ள ஒரு சுலோகத்தில் கூறப்பட்டதைப்போல, நிலையானதை என்றும் அழிக்க முடியாது என்பதற்கேற்ப திரும்பத் திரும்ப அழிக்கப்பட்ட பிறகும் சோம்நாத் கோவில் அழிந்து விடவில்லை. ஒவ்வொரு முறையும் முன்பை விட இந்தக் கோவில் மேலும் பிரகாசமாக எழுந்து நிற்கிறது.