சுயசார்பு அடையும் நாள் எப்போது?

வெளிநாட்டு பொருட்கள் என்றால் தரம் உயர்வாக இருக்கும் என்ற எண்ணம் குறையவேண்டும்.;

Update:2026-01-22 01:20 IST

நமது நாட்டில் ஜி.எஸ்.டி. மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் வரி செலுத்தும் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், கணக்கை தாக்கல் செய்யும் வணிகர்களுக்கும் எளிதாக இருக்கிறது. இல்லத்தரசிகள் மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “இந்த புதிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அளவு கடந்த பயன்களை அடைகிறது. ஏழைகள், நடுத்தர மக்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என்று எல்லோருமே வரிகுறைப்பால் லாபம் அடைந்து இருக்கிறார்கள்” என்று பெருமையோடு கூறினார். இதேநேரத்தில் அவர், நாடு எந்த பொருளுக்காகவும் மற்ற நாடுகளை சார்ந்து இருப்பது தோல்விக்கு வழிவகுக்கும்.

எனவே அனைத்து பொருட்களையும் இந்தியா தயாரிக்கவேண்டும் என்று கூறிவிட்டு, மற்றவர்களை எந்த பொருளுக்காகவும் சார்ந்து இருப்பது தேசிய சுயமரியாதையை அவமதிக்கும் செயல். ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அன்னிய நாட்டு பொருட்களை பயன்படுத்துவதற்கு விடை கொடுத்துவிட்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்கி பயன்படுத்தவேண்டும். இதுதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்வேகமாக இருக்கும். இப்போது தெரிந்தோ, தெரியாமலோ நாம் எல்லோருமே வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே பயன்படுத்துகிறோம். பல அன்னிய நாட்டு பொருட்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. இதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துவதை பலர் பெருமையாக நினைக்கிறார்கள். அந்த மனோபாவம் மாறவேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்திய பொருள் என்றால் அதன் தரம் குறைவாக இருக்கும். வெளிநாட்டு பொருட்கள் என்றால் தரம் உயர்வாக இருக்கும் என்ற எண்ணம் குறையவேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல, நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா? இந்திய இளைஞர்களின் கடின உழைப்பு இருக்கிறதா? நமது ஆண்களும், பெண்களும் சிந்திய வியர்வை அதை தயாரிக்க பயன்பட்டதா? என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்து அவர்கள் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் வகையில் சுதேசி பொருட்களையே வாங்கவேண்டும். ஆனால் சுதேசி பொருட்களை வாங்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அனைத்து பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களின் தரத்துக்கு ஈடாக இருப்பதில்லை. கடந்த 2024-25 நிதியாண்டில், இந்தியாவின் இறக்குமதி ரூ.60.89 லட்சம் கோடியாகும். ஆனால் ஏற்றுமதி ரூ.37 லட்சம் கோடிதான். இதில் இருந்தே இந்தியா இன்னும் ஏராளமான பொருட்களுக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

முக்கியமாக நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுவேர்கள், எந்திரங்கள், பொம்மைகள், ஆடை அணிகலன்கள், கைக்கெடிகாரங்கள், கைப்பைகள், வீட்டு ஆடம்பர பொருட்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. ஏன் நமது கையை விட்டு எப்போதும் பிரியாத செல்போன்கள் கூட இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் அது வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்திதான். எனவே சுயசார்பு, இந்தியாவில் தயாரிப்போம் என்பது வெறும் முழக்கமாக நின்றுவிடாமல் அதற்கு செயல்வடிவம் வேண்டுமென்றால் நீண்ட தூரம் போகவேண்டும். எந்தெந்த பொருட்களுக்காக வெளிநாடுகளை சார்ந்து இருக்கிறோம் என்பதை மத்திய-மாநில அரசுகள் பட்டியலிட்டு அந்த பொருட்களை வெளிநாட்டு தரத்துக்கு இணையாக இந்தியாவிலேயே தயாரிக்க தொழில் முனைவோரை ஊக்குவிக்கவேண்டும். அந்த பொருட்களை சந்தைப்படுத்த அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் வழங்கவேண்டும். இதனை வெற்றிகரமாக செய்தால் நாம் யாரையும் நம்பி இருக்காமல் சுயசார்பில் தன்னிறைவை எட்டலாம்.

Tags:    

மேலும் செய்திகள்