விழி பிதுங்க வைக்கும் நகைக்கடன் விதிகள்

தங்கநகைகளை வாங்கிய ரசீதை யாரும் பத்திரமாக வைப்பதில்லை.;

Update:2025-05-27 06:56 IST

தங்கம் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் ஆபரணமாக இருப்பதோடு, அத்தியாவசிய தேவையாகவும் இருக்கிறது. 'பொட்டு தங்கமாவது அணிந்து இருந்தால்தான் பெண்ணுக்கு அழகு' என்பது காலாகாலமாக பேசப்படும் வழக்கு மொழியாகும். விவசாய குடும்பங்களிலும், சிறுவியாபாரம் செய்யும் குடும்பங்களிலும் வருமானம் வரும்போது வீட்டு பெண்களுக்கும், ஆண்களுக்கும் தங்கநகைகளை வாங்கிவிடுவார்கள். ஆத்திர அவசரத்துக்கு தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிக்கொள்ளலாம் என்ற வகையில், சேமிப்பையெல்லாம் தங்கத்தில்தான் முதலீடு செய்வார்கள்.

பெரும்பாலான விவசாய குடும்பங்களில் பயிர்சாகுபடியின்போது வீட்டில் உள்ள தங்கநகைகளையெல்லாம் வங்கியில் அடமானம் வைத்து கடன்பெற்று விவசாய செலவுக்கு பயன்படுத்துவார்கள். அறுவடையானவுடன் கையில் பணம் வந்துசேர முதல்வேலையாக அடமானம் வைத்த நகையை மீட்டுவிடுவார்கள். சிலநேரம் விளைச்சல் பொய்த்துவிட்டால், ஏற்கனவே அடமானம் வைத்து வாங்கிய கடனோடு கூடுதலாக கடன்பெற்றுவிடுவார்கள். ஆனால் இப்போது அதற்கு ரிசர்வ் வங்கி ஆப்புவைத்துவிட்டது. இவ்வளவு நாளும் தங்கத்தை அடமானம் வைத்து கடன்பெற்ற எளிதான முறைக்கு முடிவுகட்டும் வகையில், தங்க நகைக்கடன் விதிகளில் 72 திருத்தங்களுக்கு வரைவு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் சில திருத்தங்கள் மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் உள்ளது.

அவற்றில் முதலாவதாக, அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 80 சதவீதம், ஏன் சில வங்கிகளில் நகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடனாக வழங்கப்பட்டு வந்தது. இதற்கு அடுத்த நிபந்தனைதான் எல்லோருக்கும் முடியாத ஒரு நிபந்தனையாகும். அடகுவைக்க கொண்டுவரும் தங்கநகைகள் தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரத்தை அதாவது, அந்த நகை வாங்கியதற்கான ரசீதை தாக்கல்செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தங்கநகைகளை வாங்கிய ரசீதை யாரும் பத்திரமாக வைப்பதில்லை. மேலும் பெண்களுக்கு பல நேரங்களில் தாய்மாமன் சீராகவும், உறவினர்களின் பரிசாகவும் தங்கநகைகளை தரும்போது யாரும் அதற்கான ரசீதோடு கொடுப்பதில்லை. மேலும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் பழைய நகைகளை வாங்கும்போது யாரும் ரசீதோடு வாங்குவதில்லை. எடையை போட்டு மட்டும் பார்த்து வாங்குவார்கள். அதோடு பாட்டி, தாயின் பரம்பரை நகைகளை வைத்து இருப்பவர்களுக்கு ரசீது என்பது ஒருபோதும் சாத்தியமில்லை.

நகையின் தரம் குறித்து வங்கி சான்றிதழ் வேண்டும். 22 காரட்டுக்குகீழ் உள்ள நகைகளை அடமானம் வைக்கமுடியாது. 24 காரட் தங்கமும் 22 காரட் தங்கமாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தனிநபர் ஒரு கிலோ தங்கநகைகளை மட்டுமே அடகுவைத்து கடன்வாங்க முடியும். தங்க நாணயமாக இருந்தால் ஒருவருக்கு 50 கிராம் மட்டுமே அடமானம் வைத்து பணம் பெறமுடியும் என்பது போன்ற விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் சில விதிகளும் இருக்கின்றன. வெள்ளி பொருட்களுக்கும் நகைக்கடன் பெறமுடியும். கடன்பெற்றவர் நகையை திருப்புவதற்கு வங்கியை அணுகி முழுத்தொகையையும் செலுத்திவிட்டால், 7 வேலைநாட்களுக்குள் வங்கியானது நகையை திருப்பி ஒப்படைக்கவேண்டும். தவறினால் அடுத்துவரும் ஒவ்வொருநாளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் என கடன் வாங்கியவருக்கு வங்கி அபராதமாக கொடுக்கவேண்டும்.

தங்கத்தை அடமானம் வைக்க மிகுந்த அவசரத்தோடு அனைவரும் வங்கியை அணுகுவார்கள். அவர்களுக்கு இதுபோல விதிமுறைகள், கட்டுப்பாடுகளை தேவையில்லாமல் விதித்தால், வட்டி கூடுதல் என்றாலும் பரவாயில்லை, நகையை கொடுத்தவுடன் எடைபோட்டு ஒரு சில நிமிடங்களில் கடன் கொடுக்கும் அடகுகடைகளை நோக்கி படையெடுத்து சென்றுவிடுவார்கள். எனவே இதுபோன்ற விதிகளை ரிசர்வ் வங்கி கைவிடவேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்