சீனா என்றால் தயக்கமா?

அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 50 சதவீத வரி விதித்தது.;

Update:2025-08-25 04:15 IST

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற உடனேயே உலக நாடுகள் மீது வர்த்தக போரை தொடங்கிவிட்டார். இதற்காக அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவில் மட்டுமே தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நிர்பந்தித்து வருகிறார். அதோடு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 2-ந்தேதி பரஸ்பர வரியை விதிக்க தொடங்கினார். அந்த நேரத்தில் இந்தியாவுக்கு 26 சதவீதமும், சீனாவுக்கு 34 சதவீதமும் வரி விதித்தார். இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கூறி வரியை நிறுத்தி வைத்தார். ஆனால் சீனா, உடனடியாக எனக்கு நீ வரி போடுகிறாயா?, உனக்கு நானும் பதிலுக்கு பதிலாக வரி போடுகிறேன் என்று கூறி அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 50 சதவீத வரி விதித்தது.

இதனால் அவர்களுக்குள் வரி போட்டி தொடங்கியது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்துக்கொண்டு இருந்த நிலையில் 50 சதவீதம், 90 சதவீதம் என்று போய் இறுதியாக சீனாவுக்கு 145 சதவீத வரியை அமெரிக்கா விதிக்க, பதிலுக்கு சீனாவும் 125 சதவீத வரியை அமெரிக்கா மீது விதித்தது. பெயரளவுக்கு இந்த வரி விதிக்கப்பட்டதே தவிர பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வந்ததால் இதை அமெரிக்கா நிறுத்தி வைத்துவிட்டது. இந்த விஷயத்தில் அமெரிக்கா இந்தியா மீது ஒரு முகத்தையும், சீனா மீது மற்றொரு மென்மையான முகத்தையும் காட்டியது. அதேவேளையில் பாகிஸ்தானுக்கு முதலில் 29 சதவீத வரியை விதித்துவிட்டு இப்போது 19 சதவீதமாக்கிவிட்டது.

இந்தியாவுடன் 40 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் ஒரு பலனும் கிடைக்காத நிலையில் தற்போது 25 சதவீத வரியும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் வருகிற 27-ந்தேதி முதல் 50 சதவீத வரியும் அறிவித்துள்ளது. அதேவேளையில் சீனாவுக்கான வரிவிதிப்பு காலம் 90 நாட்கள் முடிந்து இப்போது இன்னும் 90 நாட்கள், அதாவது நவம்பர் 10-ந்தேதி வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 145 சதவீத வரிக்கு பதிலாக இப்போது 30 சதவீதம்தான் நடைமுறையில் உள்ளது. இவ்வளவுக்கும் சீனாவும் ரஷியாவிடம் இருந்து இந்தியாவைவிட அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினாலும் அவர்களுக்கு இந்தியா மீது விதிப்பதுபோல அபராத வரி கிடையாது. ஏன் சீனாவுக்கு மட்டும் இந்த சலுகை என்றால் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது.

அமெரிக்காவில் விற்பனையாகும் பொம்மைகள், அலங்கார விளக்குகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களில் 90 சதவீதம் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே சீனாவுக்கு இந்தியா போல வரி விதித்தால் அமெரிக்காவில் அந்த பொருட்களின் விலையெல்லாம் உயர்ந்து மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டியது இருக்கும். இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையே வெளியிட்டு இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் மொத்த இறக்குமதியான ரூ.180 லட்சம் கோடியில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.40 லட்சம் கோடியாகும். இந்த பொருட்களை தவிர்த்தால் அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கே பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும். இப்படியான காரணங்களால் அமெரிக்கா சீனாவிடம் மட்டும் பம்முகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்