‘இந்தியா-ஜப்பான் கூட்டணி உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் தேவையானது’ - பிரதமர் மோடி

சிறந்த உலகத்தை வடிவமைப்பதில் வலுவான ஜனநாயகங்கள் இயற்கையாக பங்காற்றுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்;

Update:2025-08-29 18:12 IST

டோக்கியோ,

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் இருவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது;-

“இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் வாழும் ஜனநாயக நாடுகள் என்ற முறையில், இந்தியா-ஜப்பான் இடையிலான கூட்டணி என்பது இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் தேவையானது.

சிறந்த உலகத்தை வடிவமைப்பதில் வலுவான ஜனநாயகங்கள் இயற்கையாக பங்காற்றுகின்றன. இன்று, எங்கள் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையில் ஒரு புதிய மற்றும் பொன்னான அத்தியாயத்திற்கு அடித்தளமிட்டுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஒரு புதிய திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். எங்கள் தொலைநோக்கு பார்வையின் மையப்புள்ளிகளாக முதலீடு, பொருளாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், சுகாதாரம் ஆகியவை உள்ளன.

எரிசக்திக்கான நமது கூட்டு கடன் வழங்கும் வழிமுறை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நமது பசுமை கூட்டணி நமது பொருளாதார கூட்டணியைப் போலவே வலுவானது என்பதை இது காட்டுகிறது. இதே போல், எரிபொருள் மற்றும் பேட்டரி விநியோக கூட்டணியையும் நாங்கள் தொடங்க உள்ளோம். உயர் தொழில்நுட்பத் துறைக்கான ஒத்துழைப்பிற்கு இந்தியா-ஜப்பான் கூட்டணி முன்னுரிமை அளிக்கிறது.

ஜப்பானிய தொழில்நுட்பமும், இந்திய திறமையும் ஒரு வெற்றிகரமான கலவை என்று நாங்கள் நம்புகிறோம். அதிவேக ரெயில்களை நாங்கள் தயாரித்து வரும் நிலையில், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டுமானம் போன்ற துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை அடைவோம்.

சந்திரயான் 5 திட்டத்திற்கான ஒத்துழைப்புக்காக, இஸ்ரோ(ISRO) மற்றும் ஜாக்ஸா(JAXA) இடையேயான ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். நமது தீவிர ஒத்துழைப்பு, பூமியின் எல்லைகளைக் கடந்து விண்வெளியில் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான அடையாளமாக மாறும்.

இந்தியாவும், ஜப்பானும் சுதந்திரமான, அமைதியான, வளமான மற்றும் விதிகள் சார்ந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க முழுமையாக உறுதிபூண்டுள்ளன. பயங்கரவாதம் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த எங்கள் கவலைகள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளன. எங்கள் பரஸ்பர நலன்கள், பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இந்தியா-ஜப்பான் இடையிலான மனிதவள பரிமாற்ற செயல் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் 5 லட்சம் பேர் பரிமாற்றம் செய்யப்படுவார்கள். இந்தியா-ஜப்பான் கூட்டணி பரஸ்பர நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. நமது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு என்ற பொதுவான கனவை நாம் சுமந்து செல்கிறோம். அடுத்த இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு வர ஜப்பான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கிறேன்.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்