ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் இன்று பேச்சுவார்த்தை
20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான கெடு முடிந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் தரப்பு இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.;
கெய்ரோ,
பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை பரிந்துரைந்தார். காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதி பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக இந்த திட்டம் கொண்டுள்ளது. கடந்த 30-ந்தேதி வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினர் ஒப்பந்தத்தை ஏற்க 72 மணிநேர கெடு விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் 72 மணிநேர கெடு முடிந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினர் 20 அம்ச திட்டத்தை ஏற்று கொண்டதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பேச மத்தியஸ்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனை தொடா்ந்து காசாவில் உள்ள சில பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். டிரம்பின் அமைதி திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளதாக அவர் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் வரவேற்றுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இஸ்ரேல் தனது படைகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பினரிடம் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணய கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அமைதி நிலவும். 3 ஆயிரம் ஆண்டு பேரழிவின் முடிவு நெருங்குகிறது. அனைவருக்கும நன்றி. நல்ல செய்திக்காக காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.
அனைத்து பணய கைதிகளையும் விடுப்பதாக ஹமாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த டிரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் 20 அம்ச திட்டம் குறித்து விரிவாக பேசப்பட இருக்கிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் மூலோபய மந்திரி ரான் டோமர், கைதிகள் பரிமாற்ற விவகார மந்திரி கால் ஹிர்ஸ்ச் மற்றும் மொசட் உயரதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். ஹமாஸ் தரப்பில் முக்கிய தளபதிகள் கலந்து கொள்ள உள்ளனர். மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோப், டிரம்பின் மருமகனும் அவரின் தனி ஆலோசகரான ஜேரட் குஷ்னர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.