ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 80 பேர் பலி

இஸ்ரேல் ராணுவம் ஈரானியர்களை ஆயுத தொழிற்சாலைகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.;

Update:2025-06-15 14:54 IST

தெஹ்ரான்,

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக ஈரான் தெரிவித்து உள்ளது. இதற்கான விளைவுகளை அந்த நாடு அனுபவிக்கும் என ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவித்து உள்ளார். அத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை இஸ்ரேலில் 7 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி இஸ்ரேலின் வான் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள ஈரான் அரசின் அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் ராணுவம் ஈரானியர்களை ஆயுத தொழிற்சாலைகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் ஈரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானின் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்