பாரிஸ் மெட்ரோ ரெயிலில் கத்திக்குத்து தாக்குதல் - 3 பெண்கள் படுகாயம்
சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி 25 வயது இளைஞரை கைது செய்தனர்.;
பாரிஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று மாலை 4 மணியளவில் மெட்ரோ 3-வது வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். பாரிசில் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலத்தையொட்டி ரெயில்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் சூழலில் இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பெண்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், வடக்கு பாரிசில் உள்ள வால்-டி ஓய்ஸ் பகுதியில் தலைமறைவாக இருந்த 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.