70 வயதில் பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்
விண்வெளியில் அதிக வயதில் தங்கியிருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக டான் பெட்டிட் மாறியுள்ளார்.;
image courtesy: NASA
அஸ்தானா,
அமெரிக்காவை சேர்ந்த மூத்த நாசா வீரர் டான் பெட்டிட் (வயது 70). நாசாவின் சிறந்த வீரரான இவர் விண்வெளிக்கு இதுவரை 3 முறை சென்று திரும்பியுள்ளார். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் ரஷியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சோயூஸ் விண்கலம் மூலமாக மீண்டும் விண்வெளிக்கு சென்றார். அங்கு இருந்தபோது நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த பயணத்தின்போது சுமார் 220 நாட்கள் அங்கு தங்கியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று அவருடைய 70-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பூமிக்கு திரும்ப முடிவு செய்தார். இதனை தொடர்ந்து சக ரஷியா வீரர்களுடன் சோயூஸ் எம்.எஸ்-26 விண்கலம் மூலமாக பூமிக்கு திரும்பினார். கஜகஸ்தான் அருகே அவர்களுடைய விண்கலம் கடலில் பத்திரமாக தரையிறங்கியதை தொடர்ந்து டான் பெட்டிட் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து மீட்கப்பட்டனர்.
இதன் மூலம் விண்வெளியில் அதிக வயதில் தங்கியிருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக டான் பெட்டிட் மாறியுள்ளார். உலகின் வயதான நபர் ஒருவர் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்தது இதுவே முதல்முறையாகும். அவர் தன்னுடைய வாழ்நாட்களில் 590 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார். நாசா விமானம் மூலம் அவர் கஜகஸ்தானில் இருந்து புளோரிடாவுக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.