ஒருபுறம் பாதுகாப்பு பேச்சுவார்த்தை; மறுபுறம் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கேட்கும் உக்ரைன்

எங்களுக்கு நிரந்தர பாதுகாப்புக்கான உத்தரவாதங்களும் வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.;

Update:2026-01-17 10:23 IST

நியூயார்க்,

உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் மியாமி நகரில், உக்ரைன்-அமெரிக்க குழுவினரின் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் இன்று மீண்டும் தொடங்க உள்ளன.

கடைசியாக உக்ரைன்-அமெரிக்க குழுவினருக்கு இடையே கடந்த மாதத்தில் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக நடைபெற உள்ள இந்த புதிய பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை மேம்படுத்தும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, எங்கள் நாட்டை பாதுகாக்க, வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தேவையாக உள்ளன. அவற்றை எங்களுக்கு நிலையாக வழங்க வேண்டிய இக்கட்டான சூழலில் நாங்கள் இருக்கிறோம் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், நேற்று வரை அவை எங்களிடம் இல்லாத நிலை இருந்தது. தற்போது, புதிய ஏவுகணை தொகுப்புகள் எங்களை வந்தடைந்து உள்ளன என குறிப்பிட்டார். எனினும், அவற்றின் திறன், அவற்றை வழங்கிய நாடுகள் உள்ளிட்ட விவரங்களை அவர் வெளியிடவில்லை. எங்களுக்கு நிரந்தர பாதுகாப்புக்கான உத்தரவாதங்களும் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசும்போது, உக்ரைன் மீது ரஷியா 1,100 டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது என குற்றச்சாட்டாக கூறினார். இந்த சூழலில், உக்ரைனை பாதுகாத்து கொள்ளும் வகையில் ஏவுகணைகள் கிடைத்துள்ளன.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரானது 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.

ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்