இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது;
வாஷிங்டன்,
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், இந்தியா , அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், இறக்குமதி பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூகவலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், நாம் (அமெரிக்கா) இந்தியாவுக்கு குறைந்த அளவில் ஏற்றுமதி செய்கிறோம் என்று சிலருக்கு தெரியும். ஆனால், இந்தியா நமக்கு (அமெரிக்கா) அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன. வேறோபோன்று கூறவேண்டுமென்றால், இந்தியா நமக்கு அதிக அளவில் பொருட்களை விற்பனை செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் நாம் தான் (அமெரிக்கா). ஆனால், அவர்களிடம் (இந்தியா) நாம் குறைவாகவே விற்பனை செய்கிறோம்.
பல ஆண்டுகளாக இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவு ஒருதலைபட்சமாகவே இருந்தது. காரணம் என்னவென்றால் அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது அதிக அளவு வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது ஒருதலைபட்சமான பேரழிவு. ரஷியாவிடமிருந்து ஆயுதங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை இந்தியா வாங்குகிறது. ஆனால், குறைவான அளவிலேயே ஆயுதங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை நம்மிடமிருந்து (அமெரிக்கா) இந்தியா வாங்குகிறது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரியை முழுமையாக நீக்க இந்திய அரசு முன்வந்தது. ஆனால், இந்தியாவின் முடிவு காலதாமதமானது. இந்த முடிவை இந்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.