வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீதம் வரி - டிரம்ப் அறிவிப்பு

திரைப்பட தயாரிப்பு தொழில் அமெரிக்காவிடம் இருந்து திருடப்படுகிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.;

Update:2025-09-29 21:16 IST

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , உலக சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்த முடிவை ஒன்றை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சொந்த சமூக வலைதளமான டிரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தனது பதிவில், அமெரிக்காவின் சினிமா தயாரிப்பு தொழில், பிற நாடுகளால் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இது குழந்தையின் கைக்குள் இருக்கும் ‘மிட்டாய்’ திருடுவது போலத்தான் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளில் ஹாலிவுட் துறை பல சவால்களை சந்தித்து வருகிறது. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் அமெரிக்க திரையரங்குகளை ஆக்கிரமிப்பதால், உள்ளூர் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இந்த வரி எப்படி அமல்படுத்தப்படும்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

டிரம்ப் அறிவிப்புக்கு பிறகு, அமெரிக்க திரைப்பட தொழில்துறை கலவையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது. சில ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், இது அமெரிக்க திரைப்படங்களுக்கு பாதுகாப்பளிக்கும் நல்ல முடிவு என்று கூறினார்கள். ஆனால் விமர்சகர்கள், இவ்வாறு கடுமையான சுங்கவரி விதித்தால், அமெரிக்காவுக்குள் வெளிநாட்டு படங்கள் வருவது குறையும். ஆனால் அதே சமயம், பிற நாடுகளும் அமெரிக்க படங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கலாம். இதனால் ஹாலிவுட் உலக சந்தையை இழக்கும் அபாயம் அதிகரிக்கும் என எச்சரித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்