ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை: டிரம்ப் வலியுறுத்தல்

காமேனி எடுத்த நல்ல முடிவு என்றால், அது போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை தூக்கில் போடாததுதான் என்று டிரம்ப் கூறினார்.;

Update:2026-01-18 13:15 IST

தெஹ்ரான்,

ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தது. அதிகரித்த பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களுக்கு பரவியது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக, ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு உடனடியாக இறக்கி விட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது. போராடியவர்களில் 3,500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, ஈரானில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. ஈரானின் தலைவர்கள், நான் அமெரிக்காவில் செயல்படுவது போன்று செயல்பட வேண்டும். மக்களை அமைதிப்படுத்துவதற்காக அவர்களை கொல்ல கூடாது. தலைமை என்பது மரியாதையுடன் தொடர்புடையது. மரணம் அல்லது பயத்துடன் தொடர்புடையது அல்ல என்றார்.

காமேனியின் தலைமையில் உலகத்தில் மக்கள் வாழவே தகுதியில்லாத நாடாக ஈரான் மாறி விட்டது என்றும் கூறினார். காமேனியை ஒரு நோயாளி என்றும் தாக்கி பேசியுள்ளார். அவர் எடுத்த நல்ல முடிவு என்றால், அது போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை தூக்கில் போடாததுதான் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்