டிரம்ப் ஒழிக: நடுவானில் விமானத்தில் கோஷமிட்ட இந்தியர்; வைரலான வீடியோ
அமெரிக்கா ஒழிக, டிரம்ப் ஒழிக என்று கத்தி கூச்சலிட்டார். அல்லாஹூ அக்பர் என்றும் அவர் கோஷமிட்டார்.;
லண்டன்,
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லுத்தன் விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ நகர் நோக்கி தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது, அதில் பயணம் செய்த இந்தியரான அபய் தேவ்தாஸ் நாயக் (வயது 41) என்பவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்.
அவர், பயணிகள் நடந்து செல்லும் வழியில் நின்றபடி, அமெரிக்கா ஒழிக, டிரம்ப் ஒழிக என்று கத்தி கூச்சலிட்டார். அல்லாஹூ அக்பர் என்றும் அவர் கோஷமிட்டார். வெடிகுண்டை வெடிக்க செய்ய போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
இதனால், சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் விமான ஊழியர்களின் கவனத்திற்கும் சென்றது. இந்நிலையில், சக பயணிகளில் 2 பேர் எழுந்து சென்று அவரை பிடித்து, தரையில் படுக்க வைத்தனர். இதன்பின்னர் விமான ஊழியர்கள் அவரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த திங்கட்கிழமை பைஸ்லே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஒரு வாரம் வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. அவர் எதற்காக, விமானத்தில் கோஷமிட்டார் என்பதற்கான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
அவருக்கு எதிராக, விமானத்தில் ஒரு தனி நபர், விமானத்திற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டுள்ளார் என குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. எனினும், பயங்கரவாத குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.