அமெரிக்கா: நைட் கிளப்புக்கு வெளியே துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
அமெரிக்காவில் நைட் கிளப் வெளியே 13 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.;
சிகாகோ,
அமெரிக்காவின் சிகாகோ நகரில் ரிவர் நார்த் பகுதியில் உணவு விடுதிகள் மற்றும் பார்களுடன் கூடிய நைட் கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நைட் கிளப் ஒன்றுக்கு வெளியே திரண்டிருந்த மக்களை நோக்கி நேற்றிரவு சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
இதன்பின்பு, வாகனத்தில் வந்த அந்நபர்கள் உடனடியாக தப்பி விட்டனர். இதனை தொடர்ந்து தெருவெல்லாம் அழுகுரலாகவும், ரத்தம் வழிந்தோட மக்கள் அலறியபடியும் நாலாபுறமும் ஓடினர். சிலர், யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என தேடினர். அவர்களில் சிலரின் மொபைல் போன்களும் காணாமல் போயிருந்தன.
அவற்றையும் தேடியபடி இருந்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என போலீசார் இன்று தெரிவித்தனர்.
எனினும், அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர். முதல் கட்ட விசாரணையில், 13 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர் என தெரிய வந்துள்ளது. பலியானவர்களில் 2 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள் ஆவர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.