கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள மதுபான கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-25 12:28 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்டத்திலும் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7ம் தேதி மூன்றாம் கட்டத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 6:00 மணியுடன் 14 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், அங்கு இன்று காலை தொடங்கி நாளை மாலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதியின்றி ஒன்றுகூடவும், போராட்டங்கள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசியல் கட்சியினர் முழக்கங்களை எழுப்பவும், தனிநபர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கவும், உருவ பொம்மைகள் எரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள மதுபான கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மதுபானம் விற்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையமும், போலீசாரும் எச்சரித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாகவே பெங்களூரு நகரத்துக்கு உள்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இந்த முறை கடுமையான வெயில் நிலவி வருவதால் இந்த வாக்குப்பதிவு சதவீதம் மேலும் குறையலாம் என்கிற அச்சம் இருக்கிறது. அதேசமயம் தேர்தல் ஆணையம் இம்முறை அதிகப்படியான வாக்காளர்களை வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நாளை நடைபெறும் முதல்கட்ட வாக்குப் பதிவில் பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளில் மட்டும் 97 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்