5-வது டெஸ்ட்: ரோகித் சர்மாவை நேரில் பார்த்தபோது எனக்கு கொடுத்த மெசேஜ் இதுதான் - ஜெய்ஸ்வால்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார்.;

Update:2025-08-03 12:36 IST

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன.

பின்னர் 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 88 ஓவர்களில் 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் சதமடித்து (118 ரன்கள்) அசத்தினார். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி தனது 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் அடித்துள்ளது. பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜாக் கிராவ்லி 14 ரன்னில் முகமது சிராஜ் பந்து வீச்சில் போல்டானார். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த 3-வது ஆட்டத்தை இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா நேரில் கண்டு களித்தார். அத்துடன் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுமாறு ரோகித் மெசேஜ் கொடுத்ததாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். அத்துடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உடன் விளையாடிய அனுபவம் தனக்கு சதம் அடிக்க உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் ரோகித் பாயைப் பார்த்து வணக்கம் சொன்னேன். அவர், 'தொடர்ந்து சிறப்பாக விளையாடுங்கள்' என்ற செய்தியை எனக்குக் கொடுத்தார்.நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை திட்டமிட்டு விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். இது எனது ஆட்டம், எனது இன்னிங்ஸ். எனவே எங்கே ரன்கள் எடுக்கப் போகிறேன் என்பதை நான் திட்டமிட்டு விளையாடினேன்.

அத்துடன் விராட் பாய், ரோகித் பாய் போன்ற மூத்த வீரர்களுடன் சேர்ந்து விளையாடும்போது எனக்கு தொடர்ந்து நிறைய மெசேஜ் கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து விளையாடியது என்னை ஒரு நல்ல வீரராக வளர உதவியது. அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ன செய்தார்கள், அவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொண்டனர் என்பதைப் பார்த்தேன். எனவே, அது எனக்கு மிகவும் உதவியது என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்