ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

20 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.;

Update:2025-09-26 00:12 IST

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் முகமது ஹாரிஸ் மட்டும் நிலைத்து ஆடி 31 ரன்கள் எடுத்தார். முகமது நவாஸ் 25 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு பாகிஸ்தான் 135 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் அணியில் சிறப்பாக பந்துவீசிய தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷாயிப் ஹசன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக ஆடிய ஷமிம் ஹொசைன் 30 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 28-ந்தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்