ஆசிய கோப்பை: ஆல் டைம் இந்தியா பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்... நட்சத்திர வீரருக்கு இடமில்லை
சபா கரீம் தேர்வு செய்த அணிக்கு கங்குலியை கேப்டனாக நியமித்துள்ளார்.;
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இன்று துபாயில் நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக இந்திய அணி 8 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் சிறந்து விளங்கிய இந்திய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த இந்திய பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சபா கரீம் தேர்வு செய்துள்ளார்.
சபா கரீம் தேர்வு செய்த அணிக்கு கங்குலியை கேப்டனாக நியமித்துள்ளார். ஆனால் அந்த அணியில் நட்சத்திர வீரரான ரோகித் சர்மாவை அவர் தேர்வு செய்யாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சபா கரீம் தேர்வு செய்த பிளேயிங் லெவன் விவரம்: சச்சின், சவுரவ் கங்குலி (கேப்டன்), விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), கபில்தேவ், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், ஜஸ்பிரித் பும்ரா