இந்தியாவுக்கு எதிராக தோல்வி... வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கூறியது என்ன..?
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது.;
Image Courtesy: @BCCI
புதுடெல்லி,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி புதுடெல்லியில் நடந்தது. அந்த போட்டி இன்று முடிந்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த போட்டியில் இருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக் கொண்டோம். இந்த போட்டியை பொருத்தவரை ஜான் கேம்பில் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் விளையாடிய விதம் பாசிட்டிவாக இருந்தது. அவர்கள் இருவருமே எங்களது அணிக்காக மிகச் சிறப்பாக போராடி சதம் அடித்திருந்தனர்.
நாங்கள் 100 ஓவர்கள் மேல் பேட்டிங் செய்து ரொம்ப நாள் ஆகிறது. ஆனால் இம்முறை 100 ஓவர்களுக்கு மேல் விளையாடியதில் மகிழ்ச்சி. போட்டி ஐந்தாம் நாள் வரை சென்றது உண்மையிலேயே அபாரமான ஒன்று. எப்போதுமே நாங்கள் முழுமையாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த வகையில் தற்போது அணியின் பல்வேறு மாற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு சிறப்பான நிலையை நோக்கி நகர்வதாக உணர்கிறேன்.
இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆடுவது என்பது மிக சவாலான ஒன்று. இந்த போட்டியிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாலே நாங்கள் தோல்வியை சந்தித்தோம் இருந்தாலும் நாங்கள் இந்த தோல்வியை நினைத்து வருந்தாமல் இன்னும் நல்ல முன்னேற்றத்திற்காக உழைக்க காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.