வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்க வேண்டாம்: வீரர்களுக்கு கம்பீர் அறிவுரை
தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் வீரர்கள் ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.;
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் இன்று துபாயில் நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே இந்த ஆட்டத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு அந்த நாட்டுடனான இந்தியாவின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டியில் மோதக்கூடாது என்று ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இணையத்தில் பரவும் செய்திகள் இந்திய வீரர்களை கலக்கமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ட்ரெஸ்ஸிங் ரூமில் தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் வீரர்கள் ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கம்பீர் கூறியதாக அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம். மக்களின் உணர்வுகளை வீரர்கள் அறிவார்கள். இது தொடர்பாக அணி நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டங்களில் பேசினோம். வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம்.அரசியல் வேறு விளையாட்டு வேறு. ஆனால் நாங்கள் பி.சி.சி.ஐ. மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களையே பின்பற்றுகிறோம். காம்பீர் வீரர்களுக்கு கொடுத்த அறிவுரை இது தான்.உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு டென் டொஸ்சாட் கூறினார்.