முதல் டி20: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்... இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று ஆரம்பமானது.;
கார்டிப்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கார்டிப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்க இருந்த ஆட்டம் மழை காரணமாக தாமதம் ஆனது. மழை நிற்க ஏறக்குறைய 1.30 மணி நேரம் ஆன நிலையில் இந்த போட்டி 9 ஓவர்கள் ஆட்டமாக தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் அடித்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை நிற்க நீண்ட நேரம் ஆனதால் தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்ஸ் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 28 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மழை நிற்க நீண்ட நேரம் ஆனதால் டக்வொர்த்–லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 5 ஓவர்களில் 69 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியால் 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
இங்கிலாந்து தரப்பில் பட்லர் 25 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் மற்றும் கார்பின் போஷ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.