ஓய்வு முடிவை மாற்றி சமோவா அணிக்காக களமிறங்கும் நியூசிலாந்து முன்னாள் நட்சத்திர வீரர்
இவர் நியூசிலாந்து அணிக்காக 450 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.;
வெலிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ஆன ராஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். நியூசிலாந்து அணிக்காக 450 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி, 18,199 ரன்கள் (டெஸ்ட் - 7683, ஒருநாள் - 8607, டி20 - 1909) குவித்துள்ளார். மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நியூசிலாந்து அணியில் அவர் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் 3 வருடங்கள் கழித்து ராஸ் டெய்லர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். ஆனால் தற்போது ஓய்வு முடிவை மாற்றியுள்ள அவர் நியூசிலாந்துக்காக அல்லாமல் சமோவா அணிக்காக களமிறங்க உள்ளார்.
அதன்படி அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆசியா-கிழக்கு பசிபிக் தகுதிச் சுற்றில் சமோவா அணிக்காக அவர் மீண்டும் களமிறங்குகிறார். இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட சமோவா அணியில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இவரது வருகை அந்த அணிக்கு வலுவானதாக அமையும்.
டெய்லரின் தாய் சமோவா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் சமோவாவுக்காக விளையாட தகுதியுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமோவா அணி விவரம்:
காலேப் ஜாஸ்மத், ராஸ் டெய்லர், டேரியஸ் விஸ்ஸர், சீன் சோலியா, டேனியல் பர்கெஸ், டக்ளஸ் பினாவ், சாம் பிரெஞ்ச், குர்டிஸ் ஹைனம்-நைபெர்க், பென் மைலாடா, நோவா மீட், சாலமன் நாஷ், சாம்சன் சோலா, பெரெட்டி சுலுலோடோ, சவுமானி தியாய், இலி துகாகா.