அதற்காக ரிஷப் பண்டிடம் மன்னிப்பு கேட்டேன் - கிறிஸ் வோக்ஸ்

இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது.;

Update:2025-08-08 14:48 IST

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.

இதில் லண்டன் ஓவலில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இடது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் கடைசி நாளில் வேறு வழியின்றி 10-வது விக்கெட்டுக்கு களம் இறங்கினார். அப்போது வெற்றிக்கு 17 ரன் தேவையாக இருந்தது. ஒரு கையில் கட்டுபோட்டுக் கொண்டு ஒற்றைக்கையால் பேட் செய்ய வந்தது ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் 2-வது நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ரிஷப் பண்டை பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர். ஆனால் 5-வது போட்டியிலிருந்து பண்ட் விலகினார்.

ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் அர்ப்பணிப்பு இந்த தொடரை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தனது பந்துவீச்சில் காயமடைந்த ரிஷப் பண்டிடம் மன்னிப்பு கேட்டதாக கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இன்ஸ்டாகிராமில் என்னுடைய புகைப்படத்தை சல்யூட் எமோஜியுடன் ரிஷப் பண்ட் அனுப்பி இருந்தார். அவரது அன்புக்கு நன்றி தெரிவித்தேன். அதன் பிறகு அவர் எனக்கு அனுப்பிய குரல் பதிவில், எல்லாம் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். காயத்தில் இருந்து சீக்கிரம் குணமடைய வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். நான் பதிலுக்கு, நான் வீசிய பந்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்காக மன்னிப்பு கேட்டேன்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்