இப்ராகிம் ஜட்ரான் அபார சதம்... இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 177 ரன்கள் எடுத்தார்.;
Image Courtesy: AFP / Ibrahim Zadran
லாகூர்,
8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகின் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 6 ரன்னிலும், அடுத்து வந்த செடிகுல்லா அடல் 4 ரன்னிலும், ரஹ்மத் ஷா 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் அந்த அணி 37 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து இப்ராகிம் ஜட்ரான் உடன் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதில் ஷாகிதி 40 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து அஸ்மத்துலா உமர்சாய் களம் இறங்கினார்.
நிலைத்து நின்று ஆடிய இப்ராகிம் ஜட்ரான் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்மத்துல்லா 41 ரன்களில் அவுட் ஆனார். சதம் அடித்த பின்னர் இப்ராகிம் ஜட்ரான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் முகமது நபியும் சிக்சர்களை பறக்கவிட்டார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 325 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 177 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆட உள்ளது.