நானும் தோனியும் இல்லையென்றால் 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கை.. - கேரி கிர்ஸ்டன் பரபரப்பு தகவல்

2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருது வென்றார்.;

Update:2025-07-19 14:06 IST

மும்பை,

கடந்த 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை உச்சி முகர்ந்தது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு ஆல் ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.

இந்நிலையில் 2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங்கை தேர்வுக்குழுவினர் கழற்றி விட விரும்பியதாக அப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆனால் யுவராஜ் எப்படியாவது விளையாட வேண்டும் என்று தாமும் கேப்டன் தோனியும் தேர்ந்தெடுக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு: "கடவுளுக்கு நன்றி, நாங்கள் அவரை (யுவராஜ் சிங்) தேர்ந்தெடுத்தோம். அது மோசமான தேர்வு கிடையாது. 15 வீரர்கள் தேர்வு பற்றி தேர்வாளர்கள் விவாதித்தார்கள். தோனியைப் போலவே நானும் அவரை அணியில் வைத்திருக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஏனெனில் யுவராஜ் சிங் இந்திய அணிக்கு நிறைய அனுபவத்தைக் கொண்டு வருவார். கடைசியில் அவர் விளையாடியதால் உலகக்கோப்பை எப்படி முடிந்தது என்பதைப் பாருங்கள்.

யுவராஜ் சிங்குடன் எனக்கு எப்போதும் நல்ல நட்பு இருக்கிறது. சில சமயங்களில் என்னை மிகவும் ஏமாற்றுவார். ஆனால் நான் அவரை நேசித்தேன். அவர் நல்லவர். அவர் எப்போதும் ரன்கள் எடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனெனில் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது சிறப்பாக இருக்கும். யுவராஜ் சிங்கும் உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக தமக்குத் தாமே சில முக்கியமான முடிவுகளை எடுத்தார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்