சர்வதேச டி20 கிரிக்கெட்: புது வரலாறு படைத்த இங்கிலாந்து அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து இந்த சாதனையை படைத்துள்ளது.;

Update:2025-09-13 14:49 IST

மான்செஸ்டர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 141 ரன்களும், பட்லர் 83 ரன்களும் அடித்தனர்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக 300+ ரன்கள் குவித்த முதல் அணி என்ற புதிய வரலாற்றை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன்னர் வங்காளதேசத்துக்கு எதிராக இந்திய அணி 297 ரன்கள் குவித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 

அத்துடன் ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த 3-வது அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.

அந்த பட்டியல்:

1. ஜிம்பாப்வே - 344 ரன்கள்

2. நேபாளம் - 314 ரன்கள்

3. இங்கிலாந்து - 304 ரன்கள்

4. இந்தியா - 297 ரன்கள்

5. ஜிம்பாப்வே - 286 ரன்கள்

பின்னர் 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்