தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர்கள்... மற்றவர்கள் காசு கொடுத்து.. - ஹர்பஜன் கருத்தால் சர்ச்சை
இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திரசிங் தோனி. இந்திய அணிக்காக மூன்று ஐ.சி.சி. வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை (டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) வென்று கொடுத்த ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சர்வதேசகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் தற்போது ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனால் அவரது ஆட்டத்தை காண இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து ரசிகர் படையெடுப்பர். அத்துடன் அவர் களமிறங்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும் அளவிற்கு இருக்கும்.
அதேபோல் மகேந்திரசிங் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் அளவுக்கு மற்றொரு இந்திய நட்சத்திரமான விராட் கோலிக்கும் உலகமெங்கும் ரசிகர்கள் உண்டு. சொல்லப்போனால் தோனியை விட கோலிக்குத்தான் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வரிசையில் ரோகித் சர்மாவுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில் தோனிக்கு மட்டும்தான் உண்மையான ரசிகர்கள் உள்ளனர் என்று இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஒரு சிலர் காசு கொடுத்து ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள் என்று சர்ச்சை எழுப்பும் விதமாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தோனி அவரால் முடிந்தவரை விளையாட லாம். அது எனது அணியாக இருந்திருந்தால், நான் வேறு முடிவை எடுத்திருப்பேன். ரசிகர்கள் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவருக்கு உண்மையான ரசிகர் பட்டாளம் இருப்பதாக நான் உணர்கிறேன். மீதமுள்ளவர்கள் அனைவரும் சமூக வலைதளத்தை சார்ந்துள்ளார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து ரசிகர்களை வைத்திருக்கிறார்கள். இதை விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாம் அதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினால் விவாதம் வேறு திசையில் செல்லும்" என்று கூறினார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.