பஹல்காம் தாக்குதல்; மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள் இரங்கல்

மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.;

Update:2025-04-23 20:53 IST

Image Courtesy : @BCCI

ஐதராபாத்,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அப்போது பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, "பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அணியாக இத்தகைய தாக்குதல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மைதானத்தில் மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் 60 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இரு அணி வீரர்களும் தங்கல் இரங்கலை தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்