நடுவர் மீது அதிருப்தி தெரிவித்து பந்தை எறிந்த பண்ட்.. தண்டனை வழங்கிய ஐ.சி.சி.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் இந்த சம்பவம் நடந்தது.;
லீட்ஸ்,
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல் ராகுல் 47 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா தரப்பில் கே.எல்.ராகுல் 137 ரன்களும்,பண்ட் 118 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ஜாக் கிராவ்லி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
முன்னதாக இந்த போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது பந்தின் தன்மை மாறிவிட்டதாக கூறி வேறு புதிய பந்தை தரும்படி இந்திய அணியினர் நடுவர்களிடம் அடிக்கடி முறையிட்டனர். இருப்பினும் நடுவர்கள் இந்திய அணியினரின் கோரிக்கைகளை நிராகரித்தனர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட் நடுவரிடம் நேரடியாக சென்று பந்தின் தன்மையை குறிப்பிட்டு காட்டி முறையிட்டார். ஆனாலும் நடுவர் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பண்ட் பந்தை வேகமாக தூக்கி எறிந்து விட்டு சென்றார்.
இது ஐ.சி.சி. விதிமுறையை மீறிய செயலாகும். நடுவரின் முடிவு மீது அதிருப்தி தெரிவித்த விவகாரத்தில் பண்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது. பண்டும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ரிஷப் பண்டுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கி தண்டனை விதித்துள்ளது.