டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார் - ஆஸி.முன்னணி வீரர்

டேவிட் வார்னரின் ஓய்வுக்குப்பின் ஆஸ்திரேலிய அணி நிலையான தொடக்க ஆட்டக்காரர் கிடைக்காமல் தடுமாறி வருகிறது.;

Update:2025-08-11 15:26 IST

image courtesy:PTI

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான மார்னஸ் லபுசேன் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். டேவிட் வார்னரின் ஓய்வுக்குப்பின் ஆஸ்திரேலிய அணி நிலையான தொடக்க ஆட்டக்காரர் கிடைக்காமல் தடுமாறி வருகிறது. அவரது ஓய்வுக்குப்பின் நாதன் மெக்ஸ்வீனி, சாம் கான்ஸ்டாஸ், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசேன் ஆகியோரை மாற்றி மாற்றி களமிறக்கியுள்ளது. உஸ்மான் கவாஜா ஒருபுறம் நிலையான தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருகிறார். இருப்பினும் அவருக்கு நிலையான ஜோடி கிடைக்கவில்லை.

இந்த வருடம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உஸ்மான் கவாஜாவுடன் லபுசேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் 17, 22 ரன்கள் அடித்து ஒரளவு சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறவில்லை.

அந்த சூழலில் தற்போது ஆஸ்திரேலிய அணி வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. அந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் காணுவதற்கு ஆர்வமுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய மூத்த வீரர் மார்னஸ் லபுசேன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “நான் அதைச் செய்வதில் மகிழ்ச்சியடைவேன் [தொடக்க ஆட்டக்காரர்]. நான் அதைச் செய்ய விரும்புகிறேன். டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கு தொடக்க ஆட்டக்காரராக பேட்டிங் செய்ய வேண்டுமென்றால் பரவாயில்லை நான் தயார். இந்த கட்டத்தில் உங்களுக்கு வேறு வழியில்லை. நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி நன்றாக பேட்டிங் செய்ததாக உணர்ந்தேன்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்