ரிஷப் பண்ட் காயம் எதிரொலி: புதிய விதிமுறையை அறிமுகம் செய்த பி.சி.சி.ஐ.
ஐ.பி.எல். தொடரில் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுமா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
image courtesy:PTI
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இதில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் 2-வது நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. எனவே அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெறாத துருவ் ஜூரெல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இதே போல 5-வது டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்சின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரும் கடைசி நாள் ஆட்டத்தில் வலியுடன் பேட்டிங் செய்ய களமிறங்கினார். ஆனால் அவர் அந்த போட்டியில் முதல் நாள் மட்டுமே பந்துவீசினார். எஞ்சிய நாட்களில் அவர் பந்துவீசவில்லை. இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இத்தகைய சூழலில் ஹெல்மட்டில்' பந்து தாக்கி, மூளை அதிர்வு ஏற்படுபவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்க அனுமதி உண்டு. அதேபோல ஒரு போட்டியில் கடுமையாக காயம் அடைந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை அனுமதிக்க வேண்டுமென இந்திய பயிற்சியாளர் கம்பீர் வலியுறுத்தினார். இதற்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ.) உள்ளூர் போட்டிகளில் கடுமையான காயம் அடைந்தவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கி கொள்ளலாம் (கடுமையான காயம் மாற்று) என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி இனிவரும் உள்ளூர் போட்டியின்போது கடுமையாக காயம் அடையும் வீரருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கலாம்.
இது ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, சி.கே.நாயுடு டிராபி (23 வயதுக்கு உட்பட்ட) போன்ற முதல் தர போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே டிராபி உள்ளிட்ட 'வெள்ளைப்பந்து’ போட்டிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரில் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுமா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிக்கான வழிமுறைகள் குறித்து தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ.,
* புதிய விதிமுறைப்படி மைதானத்திற்குள் போட்டி நடக்கும் நேரத்தில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு எஞ்சிய போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருக்க வேண்டும்.
* காயத்தின் தன்மை பற்றி களத்தில் இருக்கும் அம்பயர்கள் முடிவு எடுப்பர். நடுவர் எடுக்கும் முடிவே இறுதியானது. இதை எதிர்த்து 'அப்பீல்' செய்ய முடியாது
* அணி மேலாளர் மாற்று வீரர் தேவை என முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். பந்துவீச்சாளர் என்றால் பந்துவீச்சாளர், பேட்ஸ்மேன் என்றால் பேட்ஸ்மேன் என்ற முறையில் மாற்று வீரரை தேர்வு செய்யலாம். 'டாஸ்' நிகழ்வின் போது மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இந்த பட்டியலில் விக்கெட்கீப்பர் இல்லாத பட்சத்தில் அணியில் இருந்து வேறு ஒரு விக்கெட்கீப்பரை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.