சல்மான் அலி பதவி பறிப்பு... பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்...? - வெளியான தகவல்
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.;
Image Courtesy: @ACCMedia1
கராச்சி,
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் மொத்தம் மூன்று முறை பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. இந்த மூன்று போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி பெரிய அளவில் சவால் கொடுக்காமல் தோல்வி அடைந்தது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.
மேலும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் ஏழு போட்டிகளில் விளையாடி 72 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் மிகக் குறிப்பாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 80 என்று இருக்கிறது. இது ஒரு நாள் போட்டிக்கே மிகவும் குறைவானதாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்கின்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்காக 112 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஷதாப் கான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.