"விரைவில் சந்திப்போம்" - லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பதிவு

6 வெற்றி, 8 தோல்வி கண்டு 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடம் பிடித்த லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.;

Update:2025-05-28 11:07 IST

Image Courtesy: @IPL / @RishabhPant17

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் ஷர்மா 85 ரன்களும்,விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த தொடரில் 6 வெற்றி, 8 தோல்வி கண்டு 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடம் பிடித்த லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், லக்னோ கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

பல ஏற்ற, தாழ்வுகள் நிறைந்த சீசன். நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்புகிறோம். அனைத்து அன்புக்கும், ஆதரவிற்கும் எல்.எஸ்.ஜி குடும்பத்தினருக்கு நன்றி. விரைவில் சந்திப்போம். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்