டி20 உலகக்கோப்பை 2026: இந்திய அணியின் ஆலோசகராகும் மகேந்திரசிங் தோனி..?
தோனி கடந்த 2021 டி20 உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டிருந்தார்.;
image courtesy:PTI
மும்பை,
2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில், மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. இதில் தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன.
இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது. அதன் முதல் கட்டமாக சுப்மன் கில்லை இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டனாக நியமித்துள்ளது.
இந்நிலையில் 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் இது தொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ. நிர்வாகம் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கு தோனி என்ன முடிவெடுத்துள்ளார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு 3 விதமான (டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) ஐ.சி.சி. கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரிய மகேந்திரசிங் தோனி, 2021-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டார். ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு நடையை கட்டியது.