இந்தியா ஏ-க்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா ஏ முன்னிலை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.;
பெங்களூரு,
இந்தியா ‘ஏ’-தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக ஆடியது. முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 299 ரன்கள் அடித்திருந்தது. அதிகபட்சமான ஜோர்டான் ஹெர்மன் 71 ரன்னும், ஜூபைர் ஹம்சா 66 ரன்னும், ரூபின் ஹெர்மன் 54 ரன்னும் சேர்த்தனர். இந்திய தரப்பில் தனுஷ் கோடியன் 4 விக்கெட்டும், மானவ் சுதர் 2 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா ஏ முதல் இன்னிங்சில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சாய் சுதர்சன் (32 ரன்கள்), ஆயுஷ் மாத்ரே (65 ரன்கள்) ஒரளவு சிறப்பாக ஆடினர். ஆனால் பின்னர் வந்த வீரர்களில் ஆயுஷ் பதோனி (38 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 17 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். முடிவில் இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 58 ஓவர்களில் 234 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுப்ரயென் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 75 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் அடித்து மொத்தம் 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜோர்டன் 12 ரன்களுடனும், லெசெகோ செனோக்வானே 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.