பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 3ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 51/2
தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 226 ரன்கள் தேவைப்படுகிறது.;
Image Courtesy: @ProteasMenCSA
லாகூர்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2ம் நாள் முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டோனி ஜி ஜோர்ஜி (81 ரன்), முத்துசாமி (6 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 162 ரன் பின்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா அணி 3வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கியது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 269 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து 109 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 277 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் மார்க்ரம் களம் கண்டனர். இதில் மார்க்ரம் 3 ரன்னிலும், அடுத்து வந்த வியான் முல்டர் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இறுதியில் இன்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது 2வது இன்னிங்சில் 22 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரிக்கெல்டன் 29 ரன்னுடனும், டோனி ஜி ஜோர்ஜி 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 226 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.