டெஸ்ட் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ்க்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், கேமர் ரோச் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.;
Image Courtesy: @ICC
ஜமைக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 71.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில்ல் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட், ஷமர் ஜோசப் 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கீசி கார்டி 40 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 18 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் நேற்றைய 3ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்திருந்தது.
வங்காளதேசம் தரப்பில் ஜாக்கர் அலி 29 ரன்னுடனும், தைஜூல் இஸ்லாம் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் தனது 2வது இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் ஜாக்கர் அலி 91 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், கேமர் ரோச் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். வங்காளதேசம் முதல் இன்னிங்சில் பெற்ற 18 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ்க்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ஆடி வருகின்றனர்.